மைக்ரோசிப் பற்றாக்குறை மற்றும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் வரவு காரணமாக, அடுத்த இரண்டு மாதங்களில் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் மற்றும் டிவிகளின் விலை கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மைக்ரோசிப்களின் விலை வரும் மார்ச் மாதத்திற்குள் 120 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதால், மின்னணு சாதன உற்பத்தி நிறுவனங்கள் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
இதன் ஆரம்பகட்டமாக ஏற்கனவே பல நிறுவனங்கள் வழங்கி வந்த தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை குறைக்கத் தொடங்கிவிட்டன. இந்த விலை உயர்வு காரணமாக மொபைல் போன்களின் விற்பனை 10 முதல் 12 சதவீதம் வரை குறையக்கூடும் என்று சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.
சாதாரண ஸ்மார்ட்போன்கள் முதல் விலையுயர்ந்த சாதனங்கள் வரை அனைத்திலும் இந்த மாற்றங்கள் எதிரொலிக்கும் என்பதால், நுகர்வோர் மின்னணு சாதனங்களை வாங்குவதில் சுணக்கம் காட்ட வாய்ப்புள்ளது.
வரும் நாட்களில் புதிய மொபைல் அல்லது டிவி வாங்கத் திட்டமிடுபவர்கள் கூடுதல் சுமையைச் சுமக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
