சேலம் ஏற்காட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் இளம்பெண் ஒருவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்த எலக்ட்ரீஷியனை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட கள்ளத்தொடர்பு மற்றும் பண விவகாரமே இந்தக் கொலைக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் நேற்று இரவு 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் மேலாடை இன்றி சடலமாகத்  கிடப்பதாக ஏற்காடு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார், பெண்ணின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காகச் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விடுதி ஊழியர்களிடம் நடத்திய விசாரணையில், நேற்று மதியம் ஒரு மணியளவில் அந்தப் பெண்ணும், சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணும் அறை எடுத்துத் தங்கியது தெரியவந்தது. மாலை 6 மணியளவில் அந்த வாலிபர் மட்டும் விடுதியை விட்டு வெளியேறியது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. நீண்ட நேரமாகியும் அறை திறக்கப்படாததால் சந்தேகமடைந்த ஊழியர்கள் கதவைத் திறந்து பார்த்தபோது, பெண் கொலை செய்யப்பட்டு கிடந்தது அம்பலமானது.

போலீஸாரின் தீவிர விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த சாலா (33) என்பது தெரியவந்தது. இவருக்கு 15 மற்றும் 13 வயதில் இரு பிள்ளைகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்த இவருக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் சேலத்தை சேர்ந்த எலக்ட்ரீஷியன் பார்த்திபன் (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. திருமணமான பார்த்திபனும், சாலாவும் கடந்த 4 ஆண்டுகளாகத் தொடர்பில் இருந்து வந்துள்ளனர்.

 நேற்று ஏற்காட்டிற்குச் சுற்றுலா வந்த இருவரும் விடுதியில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர். அப்போது சாலா தொடர்ந்து உல்லாசம் அனுபவிக்கிறாயே என பார்த்திபனிடம் பணம் கேட்டுள்ளார். “பணத்தை ஊருக்குப் போனதும் தருகிறேன்” எனப் பார்த்திபன் கூறியும், சாலா தொடர்ந்து உல்லாசமாக இருக்க வேண்டுமென்றால் பணம் வேண்டுமென்று கேட்டுள்ளார்.  இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த பார்த்திபன் சாலாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தப்பிச் சென்ற பார்த்திபனைப் பிடிக்கப் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்  தனது வீட்டில் பதுங்கியிருப்பதை அறிந்த போலீஸார், அங்கு விரைந்து சென்று அவரை லாவகமாகச் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். கைதான பார்த்திபனிடம் போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.