புதுக்கோட்டை மாவட்டம் வேப்பங்குடியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் இன்பரசன். ஜல்லிக்கட்டு வீரரான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கும் இடையே காளைகளை வாங்குவது மற்றும் வளர்ப்பதில் நீண்ட நாட்களாகப் பகை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், இன்று காலை இன்பரசன் வேலைக்குச் சென்றபோது, அழகாம்பாள்புரம் அரசுப் பள்ளி அருகே ஒரு கும்பல் அவரை வழிமறித்தது. அரிவாள், கத்திகளுடன் வந்த அந்தக் கும்பலைப் பார்த்து அதிர்ச்சியடைந்த இன்பரசன், உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடியுள்ளார்.

ஆனால், விடாமல் துரத்திய அந்தக் கொலைவெறிக் கும்பல், அவரைச் சரமாரியாக வெட்டியது. “உனக்கு கைகள் இருந்தால்தானே காளையை அடக்குவாய்?” என்று கத்திக்கொண்டே, அவரது இரண்டு கைகளையும் துண்டாக வெட்டிச் சாய்த்தனர்.

ரத்த வெள்ளத்தில் உயிருக்குப்போராடிய இன்பரசன், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து விக்னேஷ் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், தலைமறைவாக உள்ள அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.