கடந்த செப்டம்பர் மாதம் கரூரில் நடந்த தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சோகமான சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி சென்ற விஜய், காலை 11:30 மணியளவில் சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார்.
சுமார் 7 மணி நேரம் அவரிடம் சிபிஐ அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை நடத்தினர். “கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது யார்? தாமதமாக வந்தது ஏன்? கூட்ட நெரிசல் குறித்துத் தெரிந்தும் ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை?” என அதிகாரிகள் கேட்ட அடுக்கடுக்கான கேள்விகளுக்கு விஜய் விளக்கம் அளித்ததாகத் தெரிகிறது.
விசாரணைக்குப் பிறகு சுமார் ஒன்றரை மணி நேரம் தனியறையில் அமர வைக்கப்பட்டிருந்த விஜய், பின்னர் அங்கிருந்து கிளம்பி ஓட்டலுக்குச் சென்றார்.
உண்மையில் நாளையும் விசாரணை நடைபெறவிருந்தது; ஆனால் விஜய்யின் கோரிக்கையை ஏற்று அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை அவர் சென்னை திரும்புகிறார். இருப்பினும், பொங்கல் பண்டிகைக்குப் பிறகு மீண்டும் அவரிடம் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளதால், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
