தமிழகத்தில் பொங்கல் பண்டிகையைச் சிறப்பான முறையில் கொண்டாடும் வகையில், மாநிலத்திலுள்ள அனைத்து வகையான பள்ளிகளுக்கும் வரும் ஜனவரி 14-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை (புதன் முதல் ஞாயிறு வரை) ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே ஜனவரி 15 முதல் 17 வரை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களின் வசதியைக் கருத்தில் கொண்டு, போகிப் பண்டிகை தினமான ஜனவரி 14-ஆம் தேதியும் (புதன்கிழமை) விடுமுறை அளிக்கப்பட வேண்டும் எனப் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் 5 நாட்கள் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போகி, தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கல் எனத் தமிழர் திருநாளை மாணவர்கள் உற்சாகமாகக் கொண்டாட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
