மும்பை குறித்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையின் கருத்து, மகாராஷ்டிர அரசியலில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவசேனா (யுபிடி) மற்றும் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர்கள் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், “மிரட்டல்களுக்கு நான் அஞ்சமாட்டேன்” என அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
சமீபத்தில் மும்பை சென்றிருந்த அண்ணாமலை, “மும்பை மகாராஷ்டிர மாநிலத்திற்கு மட்டும் சொந்தமான நகரம் அல்ல; அது ஒரு சர்வதேச நகரம்” எனப் பேசியதாகத் தெரிகிறது. இந்த கருத்து மராத்தி மொழி உணர்வாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய சிவசேனா (யுபிடி) எம்பி சஞ்சய் ராவத், “அண்ணாமலை போன்றவர்களை மும்பைக்கு அழைத்து வந்து பாஜகவினர் சூழலைக் கெடுக்கின்றனர். சொந்த மாநிலத்திலேயே செல்வாக்கு இல்லாத அண்ணாமலை போன்ற ‘பூச்சிகளை’ பாஜக எங்கள் மீது ஏவி விடுகிறது” என்று கூறினார்.
இதேபோல், மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவும் அண்ணாமலையைச் சாடினார். “தமிழகத்திலிருந்து ஒரு ‘புழு’ மும்பைக்கு வந்துள்ளது. மகாராஷ்டிர விவகாரங்களில் பேச இவருக்கு என்ன உரிமை இருக்கிறது?” எனக் கேள்வி எழுப்பிய அவர், அண்ணாமலையை ஒரு ‘பூச்சி’ என்றும் கேலி செய்தார்.
தன்னை தனிப்பட்ட முறையில் விமர்சித்த தாக்கரே சகோதரர்களுக்கு அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “என்னை மிரட்டுவதற்கு ராஜ் தாக்கரேவோ அல்லது உத்தவ் தாக்கரேவோ யார்? நான் ஒரு விவசாயியின் மகன் என்பதில் பெருமைப்படுகிறேன். நான் மும்பை வந்தால் என் காலை வெட்டுவோம் என அவர்கள் மிரட்டுவதாகக் கேள்விப்பட்டேன். இதோ… நான் மும்பை வருகிறேன், முடிந்தால் என் காலை வெட்டிப் பாருங்கள். இதுபோன்ற உருட்டல், மிரட்டல்களுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்” என ஆவேசமாகத் தெரிவித்தார்.
மேலும் மும்பைக்கும் மகாராஷ்டிராவிற்கும் சம்பந்தமில்லை” என்று அண்ணாமலை கூறியதாகக் கூறி, “லுங்கியை கழற்றுங்கள்” என்ற பழைய கோஷங்களை சிவசேனா தலைவர்கள் மீண்டும் கையில் எடுத்துள்ளனர். அண்ணாமலையின் இந்தப் பயணம் மற்றும் பேச்சு, மகாராஷ்டிராவில் உள்ள மராத்தி அமைப்புகளுக்கும் பாஜகவுக்கும் இடையிலான மோதலை புதிய உச்சத்திற்குத் தள்ளியுள்ளது.
