நாடாளுமன்ற உறுப்பினர் ராகவ் சத்தா, அண்மையில் பிளிங்கிட் விநியோக ஊழியராக அவதாரம் எடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். கிக் தொழிலாளர்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் சவால்களை நேரில் அனுபவித்து உணர்வதற்காக, அவர் ஒரு நாள் முழுவதும் யாருக்கும் தெரியாமல் விநியோக ஊழியராகப் பணிபுரிந்தார்.

இந்த முயற்சியின் மூலம், மிகக் குறைந்த ஊதியத்தில் நீண்ட நேரம் உழைக்கும் தொழிலாளர்களின் அவல நிலையை அவர் உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டினார். குறிப்பாக, 15 மணிநேரம் உழைத்தும் வெறும் 763 ரூபாய் மட்டுமே ஈட்டிய ஒரு ஊழியரின் நிலையைச் சுட்டிக்காட்டி, இது ‘கிக் எகானமி’யின் வெற்றி அல்ல, மாறாக உழைப்புச் சுரண்டல் என்று அவர் சாடினார்.

“>

இந்த அனுபவத்திற்குப் பிறகு, விநியோக ஊழியர்களுக்கான சமூக பாதுகாப்பு மற்றும் நியாயமான ஊதியம் குறித்து நாடாளுமன்றத்தில் அவர் ஆவேசமாகப் பேசினார். விநியோக ஊழியர்கள் வெறும் எந்திரங்கள் அல்ல, அவர்கள் இந்தியப் பொருளாதாரத்தின் ‘கண்ணுக்குத் தெரியாத சக்கரங்கள்’ என்று அவர் வர்ணித்தார்.

மேலும் 10 நிமிட விநியோக கலாச்சாரம் ஊழியர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதாகக் கூறிய அவர், அவர்களுக்கு முறையான ஓய்வு, காப்பீடு மற்றும் கண்ணியமான வேலைச் சூழல் உறுதி செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். ஒரு அரசியல் தலைவராகப் பதவியில் இருந்தாலும், சாமானிய மக்களின் கஷ்டங்களை அறிய அவர் மேற்கொண்ட இந்த முயற்சி சமூக ஊடகங்களில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.