பெங்களூருவில் தனியார் நிறுவன பெண் இன்ஜினீயர் கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையை மறைத்து தீ விபத்து என நாடகமாடிய 19 வயது கல்லூரி மாணவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். ஒருதலைக் காதலால் இந்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதாவது மங்களூருவைச் சேர்ந்தவர் ஷர்மிளா (34). கம்ப்யூட்டர் இன்ஜினீயரான இவர், பெங்களூருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். கடந்த 3-ஆம் தேதி இரவு ஷர்மிளா இருந்த வீட்டில் திடீரென தீப்பிடித்தது. தகவலறிந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தபோது, ஷர்மிளா சடலமாக மீட்கப்பட்டார். முதலில் புகையால் மூச்சுத்திணறி அவர் உயிரிழந்ததாகக் கருதப்பட்டது.
உயிரிழப்பில் மர்மம் இருப்பதாகக் கருதிய போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், ஷர்மிளாவின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த கேரளாவைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கர்னல் (19) என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன.
அதாவது தன்னை விட 15 வயது மூத்தவரான ஷர்மிளாவை, கர்னல் ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். கடந்த 3-ஆம் தேதி இரவு, ஷர்மிளா வீட்டில் தனியாக இருந்ததைப் பயன்படுத்திக்கொண்ட கர்னல், பால்கனி வழியாக நைசாக வீட்டிற்குள் நுழைந்துள்ளார். பின்னர், ஷர்மிளாவிடம் கட்டி பிடித்து பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதற்கு ஷர்மிளா கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த கர்னல், அவரைத் தாக்கியுள்ளார். இதில் சுயநினைவை இழந்த ஷர்மிளாவை, தனது செயலை வெளியே சொல்லிவிடுவார் என்ற பயத்தில் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
கொலையை மறைக்கத் திட்டமிட்ட கர்னல், ஷர்மிளாவின் சடலத்தை அவர் படுத்திருந்த படுக்கையோடு சேர்த்துத் தீ வைத்துள்ளார். இது இயற்கையான தீ விபத்து போலக் காட்ட அவர் செய்த முயற்சி போலீஸாரின் கூர்மையான விசாரணையில் அம்பலமானது. மேலும் தற்போது கர்னல் மீது கொலை மற்றும் ஆதாரங்களை அழித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவரை நீதிமன்றக் காவலில் வைத்துள்ளனர்.
