ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளிக்குச் சென்ற பிளஸ்-2 மாணவி, மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய குற்றவாளிகளைப் பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
அதாவது பிளஸ்-2 மாணவி ஒருவர், கடந்த 6-ஆம் தேதி காலை வழக்கம் போல் வீட்டிலிருந்து பள்ளிக்குக் கிளம்பிச் சென்றுள்ளார். அவர் கிராமத்தின் முக்கியச் சாலையில் நடந்து சென்றபோது, காரில் பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத இரு இளைஞர்கள், திடீரென மாணவியைக் காரில் கடத்திச் சென்றுள்ளனர்.
கடத்தப்பட்ட மாணவியை ஓடும் காரிலேயே அந்த இரு இளைஞர்களும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. கார் அருகில் உள்ள கிராமத்தின் வழியாகச் சென்றபோது, மாணவி உயிருக்குப் பயந்து கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த கிராம மக்கள், காரை வழிமறித்து மாணவியை மீட்டனர்.
பொதுமக்கள் காரை மறிப்பதைக் கண்ட அந்த இரு இளைஞர்களும், மாணவியை அங்கேயே விட்டுவிட்டு காரில் தப்பியோடினர். பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் இது குறித்து நேற்று காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், தப்பியோடிய இரு இளைஞர்களையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், கிராமத்திலுள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு தற்போது மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
