“வாழ்ந்து முடித்த பின் பிள்ளைகளுக்குப் பாரமாக இருக்கக் கூடாது” என்ற நோக்கத்தில், தான் உயிருடன் இருந்தபோதே தனக்கென ஒரு கல்லறையை அமைத்துக்கொண்ட முதியவர் ஒருவர், தனது 80-ஆவது வயதில் காலமானார்.
தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் நக்கா இந்திரய்யா (80). இவர் தனது வாழ்நாளில் மற்ற பெற்றோர்களைப் போல பிள்ளைகளுக்குச் சொத்து சேர்ப்பதுடன் நின்றுவிடாமல், ஒரு வித்தியாசமான முன்னுதாரணத்தைத் தேடினார்.
தன்னுடைய மறைவுக்குப் பிறகு பிள்ளைகள் எவ்விதச் சிரமத்தையும் சந்திக்கக் கூடாது என்பதற்காக, பல ஆண்டுகளுக்கு முன்பே தனது சொந்த செலவில் கல்லறையை எழுப்பினார். ஏற்கனவே மறைந்த தனது மனைவியின் கல்லறைக்கு அருகிலேயே இதையும் அவர் அமைத்திருந்தார்.
ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அவர் உயிருடன் இருந்த காலம் வரை, தினசரி அந்த கல்லறைத் தோட்டத்திற்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அங்குள்ள செடிகளுக்கு நீர் ஊற்றி, சுற்றுப்புறத்தைச் சுத்தம் செய்துவிட்டு, சில மணிநேரம் அங்கேயே அமைதியாக அமர்ந்து தியானிப்பார்.
இது குறித்து அவரது சகோதரர் நக்கா பூமையா கூறுகையில், “இந்திரய்யா கிராமத்தில் ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைக் கட்டிக் கொடுத்துள்ளார். கிராமத்திற்குப் பல நற்பணிகளைச் செய்த அவர், தனது 4 பிள்ளைகளுக்கும் சொத்துகளைப் பிரித்துக் கொடுத்து, வீடுகளையும் கட்டித் தந்துள்ளார். குடும்பத்தில் 9 திருமணங்களை முன்னின்று நடத்தியுள்ளார்” என்றார்.
கிராமவாசி ஸ்ரீனிவாஸ் என்பவர் கூறும்போது, “நீங்கள் சேமித்து வைத்த செல்வம் ஒருநாள் உங்களை விட்டுப் போய்விடும். ஆனால் நீங்கள் மற்றவர்களுக்குக் கொடுப்பது மட்டுமே என்றும் உங்களுடன் இருக்கும் என்று அவர் அடிக்கடி கூறுவார்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
நல்ல உடல்நலத்துடன் இருந்து வந்த இந்திரய்யா, நேற்று வயது முதிர்வு காரணமாக இயற்கை எய்தினார். அவரது விருப்பத்தின்படியே, அவர் வாழ்நாளில் தனக்காகச் செதுக்கிய அந்த கல்லறையிலேயே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. மேலும் தனது இறுதி ஆசை நிறைவேறிய திருப்தியில் அந்த முதியவர் மண்ணில் உறங்குகிறார் என கிராம மக்கள் புகழாரம் சூட்டினர்.
