சித்ரதுர்கா மாவட்டம் ஒசதுர்கா பகுதியில் நீண்ட நாட்களாக நிலவி வந்த குடும்பத் தகராறு ஒரு விவசாயியின் கொலையில் முடிந்தது கிராம மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 35 வயதான விவசாயி நிங்கராஜா என்பவர் தனது தந்தை சன்னலிங்கப்பாவை இரும்புத் கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளார். தனக்கு திருமண வயது கடந்தும் தந்தை பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் மகன் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

குறிப்பாக தனது தந்தை இரண்டு முறை திருமணம் செய்து கொண்ட நிலையில் தனக்கு ஒரு திருமணம் கூட செய்து வைக்கவில்லையே என்ற ஆதங்கம் நிங்கராஜாவிற்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவத்தன்று இரவு உணவு அருந்தும்போது தந்தைக்கும் மகனுக்கும் இடையே மீண்டும் திருமண விஷயமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது தந்தை தனது மகனை வேலைக்குச் செல்லாதவர் என்றும் ஒழுக்கமற்றவர் என்றும் கண்டித்துள்ளார். இதனால் கடும் கோபமடைந்த நிங்கராஜா அன்று நள்ளிரவில் தந்தை தூங்கிக் கொண்டிருந்தபோது இரும்புத் கம்பியால் அவரது தலையில் பலமாகத் தாக்கினார். படுகாயமடைந்த சன்னலிங்கப்பாவை உறவினர்கள் மீட்டு ஒசதுர்கா அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். இது குறித்து உயிரிழந்தவரின் மூத்த மகன் மாருதி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.