நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதன் முதல் ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி மைதானத்தில் இன்று (ஜனவரி 11) மதியம் 1:30 மணிக்குத் தொடங்குகிறது.

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியில் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மீண்டும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 120 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன; இதில் இந்தியா 62 வெற்றிகளுடனும், நியூசிலாந்து 50 வெற்றிகளுடனும் உள்ளன. கடந்த 2024-ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியிருந்தாலும், ஒருநாள் போட்டிகளில் கடைசியாக மோதிய 7 ஆட்டங்களிலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. வதோதராவைத் தொடர்ந்து அடுத்தடுத்த போட்டிகள் ராஜ்கோட் (ஜன. 14) மற்றும் இந்தூர் (ஜன. 18) ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளன.