திமுக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.

பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என்று 2016-ஆம் ஆண்டே வாக்குறுதி அளித்த முதல்வர் ஸ்டாலின், தற்போது அவர்களைக் கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தங்களுக்குக் கொடுத்த 181-வது வாக்குறுதியை நினைவுபடுத்த ஆசிரியர்கள் தங்கள் நெற்றியில் அதை எழுதிப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது வருத்தமளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 10 சதவீத வாக்குறுதிகளைக் கூட திமுக முழுமையாக நிறைவேற்றவில்லை என்றும், அதற்குள் அடுத்த தேர்தலுக்காக கனிமொழி தலைமையில் குழு அமைத்திருப்பது மக்களை ஏளனம் செய்யும் செயல் என்றும் அண்ணாமலை சாடியுள்ளார்.

திமுகவின் இந்தச் செயலுக்கு 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.