விருதுநகரில் தனது காதலியுடன் போனில் பேசிய நண்பரை, மற்றொரு நண்பருடன் சேர்ந்து அடித்துக் கொலை செய்து, உடலைத் தீயிட்டுக் கொளுத்திய வாலிபரை போலீஸார் கைது செய்தனர். விருதுநகர் ஆத்துமேடு பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ். உணவகம் நடத்தி வந்த இவர், கடந்த 8-ம் தேதி காலை கௌசிகா நதி பாலத்தின் அடியில் உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், பொன்ராஜின் நண்பரான கிருஷ்ணசாமி என்பவர் மீது சந்தேகம் எழுந்தது. அவரைப் பிடித்து போலீஸார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், கொலைக்கான காரணங்கள் குறித்துப் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அதாவது கிருஷ்ணசாமியும் பொன்ராஜும் நெருங்கிய நண்பர்கள். அடிக்கடி ஒன்றாக அமர்ந்து மது அருந்தும் பழக்கம் கொண்டவர்கள். இதனிடையே, கிருஷ்ணசாமி காதலித்து வரும் பெண்ணிடம் பொன்ராஜ் தொலைபேசியில் அடிக்கடி பேசி வந்துள்ளார். இதனை கிருஷ்ணசாமி பலமுறை கண்டித்தும் பொன்ராஜ் கேட்கவில்லை எனக் கூறப்படுகிறது.

சம்பவத்தன்று, கிருஷ்ணசாமி தனது மற்றொரு நண்பரான அன்புச்செல்வன் என்பவருடன் சேர்ந்து, பொன்ராஜை இருசக்கர வாகனத்தில் கௌசிகா நதி பாலத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மூன்று பேரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது கிருஷ்ணசாமியின் காதலி குறித்து பொன்ராஜ் தவறாகப் பேசியதாகத் தெரிகிறது.

இதில் ஆத்திரமடைந்த கிருஷ்ணசாமியும், அன்புச்செல்வனும் சேர்ந்து அங்கிருந்த கற்கள் மற்றும் கட்டைகளால் பொன்ராஜை சரமாரியாகத் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த பொன்ராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். கொலையை மறைப்பதற்காக, இருவரும் பொன்ராஜின் உடலில் பெட்ரோல் ஊற்றித் தீயிட்டு எரித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

விசாரணையைத் தொடர்ந்து கிருஷ்ணசாமியை போலீஸார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அவரது நண்பர் அன்புச்செல்வனைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. காதலி விவகாரத்தில் நண்பரே அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் விருதுநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.