சென்னை திருவல்லிக்கேணியில் பெண் தையல்காரருக்கு பால்கோவாவில் மயக்க மருந்து கொடுத்து, தாலிச் செயினை திருடிய பெண்ணை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் அவர் மற்றொரு வீட்டில் 20 சவரன் நகைகளை திருடியதும் அம்பலமானது.

திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் மாலத்திரி (44), கார் மெக்கானிக். இவரது மனைவி சுஜாதா, வீட்டிலேயே தையல் தொழில் செய்து வருகிறார். கடந்த 7-ம் தேதி மாலத்திரி வேலைக்குச் சென்றிருந்த நிலையில், சுஜாதா வீட்டில் துணிகளைத் தைத்துக் கொண்டிருந்தார்.

அப்போது, அவருக்கு ஏற்கனவே அறிமுகமான அதே பகுதியை சேர்ந்த சேர்ந்த ரவணம்மா (எ) ஆர்னிப்பள்ளி ரவணம்மா என்பவர் சுஜாதாவின் வீட்டுக்கு வந்துள்ளார். தையல் வேலை தொடர்பாகப் பேசிக்கொண்டிருந்த ரவணம்மா, தான் கொண்டு வந்திருந்த பால்கோவாவை சுஜாதாவுக்குக் கொடுத்துள்ளார். அதனைச் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே சுஜாதா மயக்கமடைந்தார். இதனைப் பயன்படுத்திக்கொண்ட ரவணம்மா, சுஜாதா கழுத்திலிருந்த தாலிச் செயினை திருடிக்கொண்டு தப்பினார்.

மயக்கம் தெளிந்து எழுந்த சுஜாதா, தனது தாலிச் செயின் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், சம்பவத்தன்று அங்கு வந்த ரவணம்மாவை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவரே பால்கோவாவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நகையைத் திருடியதை ஒப்புக்கொண்டார்.

கைது செய்யப்பட்ட ரவணம்மாவிடம் நடத்திய மேல் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இது குறித்து போலீஸார் தரப்பில் கூறப்பட்டதாவது: “கைது செய்யப்பட்ட ரவணம்மா ஆந்திராவைச் சேர்ந்தவர். 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வந்த அவர், கணவரைப் பிரிந்து கூலி வேலை செய்து வந்துள்ளார். போதிய வருமானம் இல்லாததால் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். கடந்த டிசம்பர் 17-ம் தேதி திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த மகாராஜன் என்பவர் வீட்டு பீரோவிலிருந்து 20 சவரன் தங்க நகைகளை ரவணம்மா திருடியது தெரியவந்தது.”

ரவணம்மாவிடமிருந்து சுஜாதாவின் தாலிச் செயின் மற்றும் மகாராஜன் வீட்டில் திருடப்பட்ட நகைகளில் 13.5 சவரன் தங்க நகைகளை போலீஸார் மீட்டுள்ளனர். ரவணம்மா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.