நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்பட விவகாரம் தற்போது இந்திய அளவில் மிகப்பெரிய சட்டப் போராட்டமாக உருவெடுத்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத் தனி நீதிபதி இப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில், அதனை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் உயர் நீதிமன்ற அமர்வு இடைக்காலத் தடை விதித்தது. இந்தத் தடையால் பொங்கல் ரிலீஸ் கேள்விக்குறியான நிலையில், படத் தயாரிப்பு நிறுவனம் சற்றும் தாமதிக்காமல் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. வரும் திங்கட்கிழமை உச்ச நீதிமன்றம் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இருப்பதால், அன்று பிறப்பிக்கப்படும் உத்தரவே படத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.

​ஒருவேளை உச்ச நீதிமன்றம் படத்திற்குச் சான்றிதழ் வழங்க சென்சார் போர்டுக்கு உத்தரவிட்டால், மிகக் குறுகிய கால அவகாசத்தில் பொங்கல் தினத்தில் திரையரங்குகளில் ‘ஜனநாயகன்’ படத்தை வெளியிடப் படக்குழு தீவிரமாகத் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே ஒருபுறம் கரூரில் நடந்த விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணைக்காக விஜய் டெல்லி செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நிலையில், அவரது படத்தின் ரிலீஸும் டெல்லி நீதிமன்றத்தின் கைகளிலேயே தங்கியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தினர் இடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பும், ஒருவிதமான ‘திக் திக்’ மனநிலையும் நிலவி வருகிறது.