சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில், 112 அவசர கால காவல் உதவி வாகனத்தின் ஓட்டுநர் உட்பட ஐந்து பேர் சேர்ந்து 19 வயது இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 8-ம் தேதி இரவு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தெரிந்த ஒரு நபர் அவரை போன் செய்து வரவழைத்துள்ளார். பின்னர், அவரை பான்கிமோங்ரா பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டிற்கு அழைத்துச் சென்று, அந்த டிரைவர் மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேர் என மொத்தம் ஐந்து பேர் சேர்ந்து அந்தப் பெண்ணை மிருகத்தனமாக சீரழித்துள்ளனர்.
இந்தக் கொடுமைக்குப் பிறகு அந்தப் பெண்ணை மயங்கிய நிலையிலேயே அங்கேயே விட்டுவிட்டு அந்தக் கும்பல் தப்பியோடியுள்ளது. ஒருவழியாக சுயநினைவு திரும்பிய அந்தப் பெண், தனது வீட்டிற்குச் சென்று நடந்தவற்றை அழுதுகொண்டே கூறியுள்ளார். உடனே அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து, போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். தற்போது 112 வாகனத்தின் தனியார் ஓட்டுநர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மற்ற மூன்று பேரையும் எஸ்பி சித்தார்த் திவாரி தலைமையிலான தனிப்படை தீவிரமாகத் தேடி வருகிறது.
