உலகிலேயே மிகவும் ஆபத்தான மற்றும் விஷம் கொண்ட பாம்புகளில் ஒன்றாகக் கருதப்படும் ராஜவெம்பாலிடம் மற்றுமொரு பாம்பை ஒரே பெட்டியில் அடைக்க முயன்றபோது, அது கண் இமைக்கும் நேரத்தில் அந்தப் பாம்பைக் கவ்விப் பிடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெட்டிக்குள் ஏற்கனவே படமெடுத்துக் கொண்டு ஆக்ரோஷமாக இருந்த ராஜவெம்பாலுடன், ஒரு நபர் வேறொரு பாம்பைப் போட முயன்றார்.
— Nature Chapter (@NatureChapter) January 9, 2026
அப்போது உள்ளே வந்த புதிய பாம்பை பார்த்த உடனேயே அதன் வாயைப் பிடித்த ராஜவெம்பால், தனது உடலால் அந்தப் பாம்பைச் சுருட்டி வளைத்துத் தப்பிக்க முடியாதபடி ஆக்கிவிட்டது. ராஜவெம்பால்கள் இயற்கையாகவே மற்ற பாம்புகளை வேட்டையாடி உண்ணும் பழக்கம் கொண்டவை என்பதால், இந்தத் தாக்குதல் அதன் இயல்பான குணத்தையே வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
இந்த அதிர்ச்சியூட்டும் வீடியோவானது எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட சில நாட்களிலேயே 9 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. ராஜவெம்பால்கள் ஏன் பாம்புகளின் ராஜா என்று அழைக்கப்படுகின்றன என்பதற்கு இந்தத் தாக்குதலே சாட்சி என இணையவாசிகள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். அதே சமயம், மற்றொரு பாம்பை அநியாயமாக ராஜவெம்பாலுக்கு இரையாக்கிய அந்த நபரின் செயலுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ராஜவெம்பாலின் அபரிமிதமான வேகம் மற்றும் வலிமையைக் கண்டு பலரும் வியந்தாலும், இதுபோன்ற ஆபத்தான செயல்களை யாரும் முயற்சி செய்ய வேண்டாம் என்று வனவிலங்கு ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
