தேர்தல் நெருங்கும் வேளையில் ‘ஜனநாயகன்’ திரைப்பட விவகாரத்தை வைத்து திமுகவும் காங்கிரஸும் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாக பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு திரைப்படத்திற்கு ‘யுஏ’ சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்றால், தணிக்கை வாரியத்தின் சில சட்ட விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்பது அவசியமாகும்.

இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்கும்படி தணிக்கை வாரியம் அறிவுறுத்திய போதிலும், படக்குழுவினர் அந்த மாற்றங்களைச் செய்ய மறுப்பதே தற்போதைய வெளியீட்டுத் தாமதத்திற்கு முக்கியக் காரணமாகும். இது முற்றிலும் தணிக்கைத் துறைக்கும் படக்குழுவுக்கும் இடையிலான நடைமுறைச் சிக்கலே தவிர, இதில் மத்திய அரசுக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று அவர் தனது அறிக்கையில் விளக்கம் அளித்துள்ளார்.

திரைப்படத் துறையில் அரசியல் செய்ய வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை என்று குறிப்பிட்டுள்ள பிரசாத், வரவிருக்கும் தேர்தலை மனதில் வைத்து மக்களைத் திசைதிருப்பவே இண்டியா கூட்டணி கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக அவதூறு பரப்பி வருவதாகச் சாடியுள்ளார். நடிகர் விஜய் தரப்பினர் இந்த விவகாரத்தை அரசியலாக்க முயலக்கூடாது என்று கேட்டுக்கொண்ட அவர், ‘ஜனநாயகன்’ திரைப்படம் விரைவில் வெளியாகி வெற்றி பெற வேண்டும் என்பதே தங்கள் விருப்பம் என்றும் தெரிவித்துள்ளார்.

தணிக்கை வாரியத்தின் விதிகள் அனைவருக்கும் பொதுவானவை என்றும், அவற்றைச் சரியாகப் பின்பற்றினால் எவ்விதத் தடையும் இன்றிப் படம் வெளியாகும் என்றும் அவர் அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.