புத்தாண்டின் தொடக்கமாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், அகவிலைப்படி (DA) 60 சதவீதமாக உயரவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. தற்போது 58 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை, தொழிலாளர் பணியகம் வெளியிட்டுள்ள நுகர்வோர் விலைக் குறியீட்டு (AICPI-IW) எண்களின் அடிப்படையில் மேலும் 2 சதவீதம் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, 2025 நவம்பர் மாதத்திற்கான விலைக் குறியீடு 0.5 புள்ளிகள் உயர்ந்து 148.2 ஆகப் பதிவாகியுள்ள நிலையில், 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி இந்த உயர்வு கணக்கிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 1 கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பலன் பெறவுள்ளனர்.

2026 ஜனவரி 1-ம் தேதியிட்ட இந்த உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்றும், ஜனவரி முதல் கணக்கிடப்பட்டு நிலுவைத் தொகையுடன் (Arrears) வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 8-வது ஊதியக் குழு தொடர்பான விவாதங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த 60 சதவீத எட்டானது ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.