உக்ரைன் – ரஷ்யா போர் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ ஆகியவற்றில் ட்ரோன்களின் ஆதிக்கம் அதிகரித்ததைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் தனது போர் வியூகத்தை அதிரடியாக மாற்றியமைத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ‘ஷக்திபான்’ என்ற பெயரில் 15 முதல் 20 புதிய ட்ரோன் படைப்பிரிவுகளை உருவாக்க ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர துவேதி உத்தரவிட்டுள்ளார். பீரங்கிப் படையின் கீழ் செயல்படும் இந்தப் படைப்பிரிவுகள், 5 முதல் 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்ட திரள் ட்ரோன்கள் (Swarm Drones) மற்றும் சுழலும் வெடிபொருட்களைக் (Loitering Munitions) கையாளும்.

இதற்காக ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் 850 தற்கொலை ட்ரோன்களை வாங்க ராணுவம் டெண்டர் கோரியுள்ளதோடு, எதிரியின் பதுங்கு குழிகளைத் தகர்க்க ‘திவ்யஸ்திரா’ பேட்டரிகளையும் களமிறக்கத் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீரர்களுக்கு ட்ரோன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நவீன மறுசீரமைப்பு இந்திய எல்லைப் பாதுகாப்பில் ஒரு புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.