மேற்கு வங்காளத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) காரணமாக மாநிலம் முழுவதும் நிலவும் பதற்றம், தற்போது பெரும் சோகமாக மாறியுள்ளது. குறிப்பாக, உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 64 வயது முதியவர் பப்லு பால், தனது பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு, தான் சட்டவிரோதமாக குடியேறியவராக முத்திரை குத்தப்படலாம் என்ற அச்சத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸைப் பெற்றதில் இருந்து கடுமையான மன உளைச்சலில் இருந்த அவர், தனது வீட்டிலேயே தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார். இதன் மூலம், வாக்காளர் பட்டியல் குளறுபடிகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ள நிலையில், இந்த விவகாரம் அம்மாநில மக்களிடையே பெரும் பீதியை கிளப்பியுள்ளது. இருப்பினும், இந்த உயிரிழப்பிற்கு உண்மையான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
