ஈரானில் அரசுக்கு எதிராகப் போராடும் மக்களைக் கொன்று குவித்தால், அந்நாட்டுத் தலைவர் அயோதுல்லா அலி காமேனியும் அவரது ஆதரவாளர்களும் கொல்லப்படுவார்கள் என அமெரிக்கா பகிரங்கமாக எச்சரித்துள்ளது. ஈரான் அதிபர் அயோதுல்லா அலி காமேனியின் ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் கடந்த சில நாட்களாகத் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விண்ணைத் தொடும் பணவீக்கம், அத்தியாவசியப் பொருட்களின் கடும் விலை உயர்வு மற்றும் நிலைகுலைந்துள்ள பொருளாதாரம் ஆகியவற்றால் அதிருப்தி அடைந்த மக்கள், வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மக்களின் எழுச்சியைக் கட்டுப்படுத்த ஈரான் அரசு பாதுகாப்புப் படையினரை ஏவி விட்டுள்ளது. இதில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் இதுவரை 38 பேர் பலியாகியுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையிலும், நாட்டின் பல்வேறு மாகாணங்களில் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
ஈரான் விவகாரத்தில் அந்நாட்டு மக்களுக்கு அமெரிக்கா தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகையில், “அமைதியான முறையில் போராடுபவர்களை ஈரான் அரசு வழக்கம்போல் சுட்டுக் கொன்றால், அவர்களை மீட்க அமெரிக்கா முன்வரும். இதற்காக நாங்கள் துப்பாக்கி ஏந்திப் போருக்குச் செல்லவும் தயாராக இருக்கிறோம். ஈரானை மீண்டும் ஒரு சிறந்த நாடாக மாற்றுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல், அமெரிக்க செனட் உறுப்பினர் லிண்ட்சே கிரகாம் அளித்த பேட்டியில் ஈரானுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறுகையில், “ஈரான் மக்களே, நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். உலகைப் பயங்கரவாதத்தின் பிடியில் வைத்துள்ள அயோதுல்லாவிடமிருந்து உங்கள் நாட்டை மீட்டெடுக்க உறுதுணையாக நிற்போம்.
அயோதுல்லாவிற்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன், டிரம்ப் ஒன்றும் ஒபாமா அல்ல. சிறந்த வாழ்க்கை கேட்டுப் போராடும் உங்கள் நாட்டு மக்களை நீங்கள் தொடர்ந்து கொன்று குவித்தால், அடுத்ததாக டிரம்ப் உங்களைக் கொல்லப் போகிறார். நீங்களும் உங்கள் ரவுடி கும்பலும் மரணிக்கப் போகிறீர்கள்” என அதிரடியாகத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தால் சர்வதேச அளவில் போர் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது.
