மூட்டு வலி மற்றும் குருத்தெலும்பு தேய்மானத்திற்கு நிரந்தரத் தீர்வாக அமெரிக்காவின் ஸ்க்ரிப்ஸ் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் ஒரு புதிய புரட்சிகரமான ஊசி மருந்தைக் கண்டறிந்துள்ளனர். மனித உடலில் இயற்கையாகவே காணப்படும் ‘14-3-3 zeta’ என்ற புரதத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தத் குறிப்பிட்ட புரதம் செல்கள் முதுமையடைவதைத் தடுத்து, தேய்ந்து போன குருத்தெலும்புகளை மீண்டும் வளரச் செய்யும் அற்புதமான ஆற்றல் கொண்டது என்பது எலிகள் மீதான சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மூட்டு வலிக்கு வழங்கப்படும் மருந்துகள் வலியைக் குறைக்க மட்டுமே பயன்பட்டு வந்த நிலையில், இந்த புதிய கண்டுபிடிப்பு தேய்மானத்தை அடிப்படையிலேயே சரிசெய்யும் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

இந்த நவீன ஊசி மருந்து பாதிக்கப்பட்ட மூட்டுப் பகுதிக்குச் சென்றவுடன், புதிய திசுக்கள் உருவாவதற்கான சமிக்ஞைகளை செல்களுக்கு வழங்கி குருத்தெலும்புகளைப் புத்துயிர் பெறச் செய்கிறது. இது முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒரு சிறந்த மாற்றாக அமையும் என்றும், குறிப்பாக விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் காயங்களை விரைவாகக் குணப்படுத்த இது ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தற்போது விலங்குகள் மீதான சோதனையில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள இந்த முறை, விரைவில் மனிதர்களுக்கான மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது. மூட்டுத் தேய்மானப் பிரச்சனையை வேரோடு நீக்க உதவும் இந்த ‘ஆண்டி-ஏஜிங்’ சிகிச்சை முறை மருத்துவ உலகில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.