வங்காளதேசத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெடித்த மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்த நிலையில், தற்போது அங்கு மீண்டும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தலைமையில் அடுத்த மாதம் பொதுத்தேர்தல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள சூழலில், கிளர்ச்சிக் குழுவின் முக்கியத் தலைவராக இருந்த ஷெரீப் உஸ்மான் ஹாதி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூரில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, டிசம்பர் மாதம் முதல் நாடு முழுவதும் வெடித்த வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 11-க்கும் மேற்பட்ட இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், வங்காளதேச தேசியக் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அஜிஜுர் ரகுமான் முசாபீர், தலைநகர் டாக்காவில் மர்ம நபர்களால் நேற்றிரவு சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது அங்குள்ள சட்டம் ஒழுங்கு சீர்குலைவை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.
தற்போதைய வன்முறையைக் கட்டுப்படுத்த முடியாமல் இடைக்கால அரசு திணறி வரும் நிலையில், அரசியல் படுகொலைகள் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளன. தேர்தல் நெருங்கும் வேளையில் இத்தகைய மோதல்கள் வங்காளதேசத்தின் ஜனநாயக மாற்றத்திற்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன.
