நடிகர் விஜய் மற்றும் பாஜக தரப்பு இணைந்து ஒருவித நாடகத்தை அரங்கேற்றுகிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகச் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

நெல்லை பாளையங்கோட்டையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: கரூர் விவகாரத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாகத் தமிழக அரசு விசாரணை ஆணையம் அமைத்தபோதே, ‘நான் சென்னையில்தான் இருக்கிறேன்; முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள்’ என நடிகர் விஜய் வீரவசனம் பேசினார். ஆனால், தற்போது அதே விவகாரத்தில் வரும் 12-ஆம் தேதி ஆஜராகுமாறு அவருக்கு சிபிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முன்னதாகப் பேசிய அதே வீரவசனத்தை இப்போதும் அவர் பயன்படுத்துவாரா? அல்லது பா.ஜ.க.வுடன் இணைந்து அவர் நாடகம் ஆடுகிறாரா? என்பது தெரியவில்லை.

உச்சநீதிமன்றம் வரை சென்று சிபிஐ விசாரணை கோரினாலே நியாயம் கிடைத்துவிடும் என்று நினைப்பது தவறு. அண்டை மாநிலமான ஆந்திராவில் ரசிகர் இறந்த விவகாரத்தில் ஒரு முன்னணி நடிகரே கைது செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசு இந்த வழக்கை தொடர்ந்து நடத்தியிருந்தால் சட்டம் தன் கடமையைச் சரியாகச் செய்திருக்கும்.

மத்திய அரசுதான் திரைப்படங்களுக்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்குகிறது. அப்படியிருக்க, விஜய் படம் வெளியாவதில் ஏதோ சிக்கல் இருப்பது போன்ற பிம்பத்தை உருவாக்கி, தொண்டர்கள் மத்தியில் ஒரு கொதிநிலையை ஏற்படுத்த பா.ஜ.க.-வும் விஜய்யும் இணைந்து செயல்படுவது போலத் தெரிகிறது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், பிரதமருக்கும் பொருளாதாரம் பற்றி எதுவும் தெரியாது எனப் பா.ஜ.க.வைச் சேர்ந்த சுப்பிரமணிய சுவாமி பலமுறை கூறியும் அவர் மீது இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அதேபோல், காங்கிரஸ் கட்சியில் பலர் கூட்டணி குறித்துப் பல்வேறு கருத்துகளைப் பேசினாலும், அந்தத் தலைமை இறுதியில் நல்ல முடிவை எடுக்கும்.” இவ்வாறு சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். மேலும் ஜனநாயகன் தன்னுடைய கடைசி படம் என்பதால் நடிகர் விஜய் தேவை இல்லாமல் பில்டப் செய்கிறார் எனவும் ரசிகர்களை கொதி நிலையில் வைத்திருப்பதற்காக இவ்வாறு செய்கிறார் எனவும் விமர்சித்தார்.