தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை முன்னிட்டு மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி தான் அமையும் என உள்துறை மந்திரி அமித்ஷா தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் அதிமுக தலைவர்கள் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் இதனை மறுத்த நிலையில் அதிமுக தனி பெரும்பான்மையுடன் தனித்து தான் ஆட்சி அமைக்கும் என்கிறார்கள்.

தற்போது தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற குறல் ஓங்கி ஒலித்துள்ள நிலையில் இது தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்த நிலையில் பாமக அதிமுக உடன் கூட்டணியை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்த நிலையில் டெல்லிக்கு சென்ற எடப்பாடி பழனிச்சாமியிடம் அமித்ஷா 53 சீட்டு வேண்டுமென்று கேட்டதாகவும் 3 அமைச்சர்கள் வேண்டுமென்று கேட்டதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் மூத்த தலைவர்களிடம் ஆலோசித்து சொல்வதாக அவரிடம் கூறியதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்துமா என்ற விவாதத்தை தூண்டியுள்ளது.