நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்பட விவகாரத்தில் தேவையின்றி அரசியல் சாயம் பூசப்படுவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டு வருவது, அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. மத்திய அரசு அரசியல் உள்நோக்கத்துடன் விஜய்க்கு நெருக்கடி கொடுப்பதாகப் பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் இது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:
நெருக்கடி என்பது தவறு “விஜய்யின் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படுவதில் தாமதம் ஏற்படுவது போன்ற விஷயங்களுக்கு அரசியல் சாயம் பூசக் கூடாது.
கூட்டணிக்குள் கொண்டு வருவதற்காக அவருக்கு நெருக்கடி கொடுக்கப்படுவதாகச் சொல்வது தவறு. ஒரு திரைப்படத்தைத் தடை செய்வதன் மூலம் ஒருவருக்கு நெருக்கடி கொடுத்துவிட முடியாது. மாபெரும் தலைவராகப் பிரதமர் மோடி விளங்குகிறார். ஒரு கூட்டணியில் யாரையும் வற்புறுத்திச் சேர்க்க முடியாது. தலைவர்களும், தொண்டர்களும் மனமுவந்து இணைந்து வந்தால் மட்டுமே அது வெற்றிகரமான கூட்டணியாக அமையும். அதை விடுத்து, கூட்டணிக்காக இதுபோன்ற செயல்களில் மத்திய அரசு ஈடுபடுவதாகக் கூறி கொச்சைப்படுத்தக் கூடாது.
விஜய் தனிக்கட்சி ஆரம்பித்துள்ள நிலையில், அவருக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் வேறு எத்தனையோ வழிகள் உள்ளன. எனவே, இந்த விவகாரத்தில் உள்நோக்கம் கற்பிப்பது தேவையற்றது.” இவ்வாறு செல்லூர் ராஜு தெரிவித்தார்.
