தமிழக வாழ்வுரிமை கட்சியில் (தவாக) பண்ருட்டி வேல்முருகனுக்கு வலதுகரமாகத் திகழ்ந்த கள்ளிப்பட்டு ஆறுமுகம், தற்போது மீண்டும் தனது தாய் கழகமான பாமகவில் இணைந்துள்ளார். கடலூரில் நேற்று நடைபெற்ற எழுச்சியான பொதுக்கூட்டத்தில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முன்னிலையில் தனது 5,000 ஆதரவாளர்களுடன் அவர் இணைந்தது வடமாவட்ட அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தவாகவின் வளர்ச்சிக்கு முக்கியத் தூணாக இருந்த ஒரு மூத்த தலைவர் பாமகவிற்குத் திரும்பியிருப்பது, தேர்தல் நெருங்கும் வேளையில் அக்கட்சிக்குப் பெரும் பலமாகக் கருதப்படுகிறது.

​இந்த இணைப்பை ஒரு விழாவாகவே பாமக கொண்டாடி வருகிறது. கள்ளிப்பட்டு ஆறுமுகத்தின் வருகையினால் கடலூர் மாவட்ட தவாக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. “சொந்த வீட்டிற்குத் திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது” என ஆறுமுகம் உருக்கமாகப் பேசியுள்ள நிலையில், தவாக தலைவர் வேல்முருகனுக்கு இது ஒரு பேரிடியாக அமைந்துள்ளது. இந்த மாற்றம் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.