கோவையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அமைச்சர் அமித் ஷாவின் வருகை முதலமைச்சர் ஸ்டாலினை வெகுவாகப் பாதித்துள்ளதாக விமர்சித்துள்ளார்.
திண்டுக்கல்லில் நடந்த அரசு விழாவில் அமித் ஷாவை ‘அவதூறு ஷா’ என்று முதலமைச்சர் பேசியிருப்பது, அவருடைய பயத்தையும் புலம்பலையும் காட்டுவதாக வானதி சீனிவாசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
திமுக அரசு 4 ஆயிரம் கோயில்களுக்குக் குடமுழுக்கு செய்ததாகக் கூறுவது வெறும் விளம்பரம் என்றும், உண்மையில் கோயில்களின் பணம் கொள்ளையடிக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
குறிப்பாக, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சிலைகள் செய்ய பக்தர்களிடம் பெற்ற தங்கத்தில் முறைகேடு நடந்திருப்பதை ஐஐடி ஆய்வறிக்கை அம்பலப்படுத்தியுள்ளதை அவர் நினைவூட்டியுள்ளார்.
மேலும், நீதிமன்ற உத்தரவு இருந்தும் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றத் தடுத்த திமுக அரசுக்கு இந்துக்கள் பற்றிப் பேசத் தகுதி இல்லை என்றும் அவர் காரசாரமாகத் தெரிவித்துள்ளார்.
அடுத்த முறை அமித் ஷா தமிழகம் வரும்போது அதிமுக – பாஜக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இணையும் என்றும், அந்தக் கூட்டணி திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்றும் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
இனி வரும் நாட்களில் திமுக-வின் கதறல் இன்னும் அதிகமாக இருக்கும் என்றும், ஆட்சி அதிகாரம் பறிபோகும் பயத்திலேயே அரசு விழாக்களில் கூட முதலமைச்சர் அரசியல் பேசி வருவதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
