திண்டுக்கல் மாவட்டம் வேலு நாச்சியார்புரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 300-க்கும் மேற்பட்ட புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிப் பேசினார்.

அப்போது, தி.மு.க. அரசு இந்துக்களுக்கு எதிரானது என்று மத்திய அமைச்சர் அமித் ஷா கூறிய புகாருக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்தார். தமிழ்நாட்டில் மதக்கலவரம் செய்து பிழைப்பு நடத்தலாம் என நினைப்பவர்களின் எண்ணம், தான் முதலமைச்சராக இருக்கும் வரை ஒருபோதும் நிறைவேறாது என்று அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.

மேலும், “2026-ல் தமிழ்நாட்டில் மோடி ஆட்சி அமைய வேண்டுமா?” என்று அமித் ஷா கேட்டிருப்பதைப் பார்த்தால், அ.தி.மு.க-வுக்கு வாக்களிப்பது என்பது பா.ஜ.க-வுக்கு வாக்களிப்பதற்குச் சமம் என்பதை அவரே ஒப்புக்கொண்டுள்ளார் என்று ஸ்டாலின் விமர்சித்தார்.

அ.தி.மு.க. வெற்றி பெற்றால் டெல்லியில் இருந்து பா.ஜ.க. தான் தமிழகத்தை ஆளும் என்பதை அமித் ஷாவே உறுதி செய்துவிட்டதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர், இதற்கு அமித் ஷாவுக்குத் தனது நன்றியைத் தெரிவிப்பதாகக் கிண்டலாகக் கூறினார்.