திருப்பரங்குன்றம் மலைக்கோயில் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்த நீதிமன்றத் தீர்ப்பை விமர்சித்த திமுக அமைச்சர் ரகுபதியின் கருத்துக்கு, பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைச்சரின் பேச்சானது இந்துக்களின் வழிபாட்டு முறைகளையும், மரபுகளையும் இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், திமுக அரசு தொடர்ந்து இந்து மத விரோத மனப்போக்குடன் செயல்பட்டு வருவதாகச் சாடினார்.
நீதிமன்றத் தீர்ப்பையே அவமதிக்கும் வகையில் அமைச்சர்கள் பேசுவது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார். மக்களிடையே பிரிவினையைத் தூண்டும் வகையிலும், நாவடக்கம் இன்றியும் பேசி வரும் திமுகவினருக்கு தமிழக மக்கள் விரைவில் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று அண்ணாமலை எச்சரித்துள்ளார்.
மேலும் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஆன்மீகச் சடங்குகளைக் கேலி செய்வதும், மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதும் திமுகவின் வாடிக்கையாகிவிட்டது என்று அவர் விமர்சித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
