ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் போது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகத் தொடரப்பட்ட வழக்குகளில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது, அனுமதி இன்றி கூட்டம் நடத்தியது மற்றும் விதிகளை மீறியது தொடர்பாக சீமான் மீது மொத்தம் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளின் விசாரணைக்காக ஈரோடு நீதிமன்றத்தில் இன்று ஆஜரான சீமானிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் மீண்டும் மார்ச் மாதம் 9-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று அவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்ற விசாரணையை முடித்துவிட்டு வெளியே வந்த சீமான், செய்தியாளர்களிடம் பேசியதாவது: திமுகவும் அதிமுகவும் மாறி மாறி ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறிக்கொள்வது தமிழகத்தின் கொடுந்துயரம். தேர்தலுக்குத் தேர்தல் இவர்கள் ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுகளை அடுக்கி வைப்பது ஒரு வழக்கமான வேடிக்கையாகிவிட்டது.

வரவிருக்கும் தேர்தலில் அதிமுக மற்றும் பாமக இடையே கூட்டணி உருவாவது என்பது ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்றுதான். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு ரூ.3,000 வழங்காதது ஏன்? தேர்தல் வரும்போது மட்டும் மக்களைக் கவர்வதற்காக சில அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள்.

இவ்வாறு சீமான் தெரிவித்தார். சீமான் வருகையையொட்டி ஈரோடு நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததுடன், நாம் தமிழர் கட்சியினர் பெருமளவில் திரண்டிருந்தனர்.