தன் தந்தைக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற, தினசரி வருமானத்தில் பாதியை ஏழை மக்களுக்காகச் செலவிட்டு வரும் டெல்லி டெலிவரி பாய் ஆகாஷ் சரோஜ் (Akash Saroj) குறித்த உருக்கமான தகவல்.

டெல்லியின் பாலாஸ்வா (Bhalaswa) குடிசைப் பகுதியில் வசிக்கும் ஆகாஷ் சரோஜ், ஒரு சிறந்த நடனக் கலைஞர். 2014 முதல் நடனம் பயின்று வரும் இவருக்கு, ஒரு பெரிய நடன இயக்குநராக வேண்டும் என்பதே லட்சியம்.

ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவரது தந்தை திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். நண்பர்களிடம் கடன் வாங்கி சிகிச்சை அளித்தபோதும், ஆகாஷின் தந்தை உயிரிழந்தார்.

மரணப்படுக்கையில் இருந்த ஆகாஷின் தந்தை, “உன்னிடம் பணம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, மற்றவர்களுக்கு எப்போதும் உதவி செய்” என்று கடைசி ஆசையாகக் கேட்டுக்கொண்டார்.

 

View this post on Instagram

 

A post shared by Aakash Saroj (@imaakashsaroj)

தந்தையின் இந்த வாக்கை தனது வாழ்நாள் லட்சியமாக ஏற்றுக்கொண்டார் ஆகாஷ். தந்தை இறந்த பிறகு ஏற்பட்ட சுமார் 3 லட்சம் ரூபாய் கடனை அடைக்க, முழுநேர உணவு விநியோக ஊழியராக (Delivery Partner) மாறினார்.

தினமும் 12 மணி நேரத்திற்கு மேலாக டெல்லி டிராஃபிக்கில் உழைக்கும் ஆகாஷ், ஒரு நாளைக்குச் சுமார் 600 ரூபாய் வரை சம்பாதிக்கிறார்.

அதில் பாதியான 300 ரூபாயை ஏழைகளுக்காகவே செலவிடுகிறார். குளிர்காலத்தில் சாலையில் தூங்குபவர்களுக்குப் போர்வைகள் வழங்குவது, பசியில் இருப்பவர்களுக்கு உணவு வழங்குவது எனத் தொடர்ந்து உதவி வருகிறார். இவரது இந்தச் செயல் சமூக வலைதளங்களில் ‘ரியல் ஹீரோ’ எனப் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.