பீகார் மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட மகன், அந்தமான் மற்றும் மியான்மர் நாடுகளில் சித்ரவதைகளை அனுபவித்துவிட்டு, தற்போது தனது தாயுடன் இணைந்துள்ள நெஞ்சை உருக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது.
பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தைச் சேர்ந்த ஜரினாவின் என்பவரின் 12 வயது மகன் முன்னா, கடந்த 2012-ஆம் ஆண்டு கடத்தப்பட்டார். “மதரஸாவில் சேர்த்து படிக்க வைக்கிறோம்” என்று கூறி ஆசை வார்த்தை காட்டிய அதே ஊரைச் சேர்ந்த கும்பல், சிறுவனை உத்திரப் பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று சுமார் 15 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளது.
அங்கிருந்து அந்தமான் மற்றும் மியான்மர் நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட முன்னா, அங்கு அடிமையாக வைக்கப்பட்டார். அவருக்குக் கட்டாய ஊசிகள் போடப்பட்டும், இரவும் பகலும் ஓயாமல் வேலை வாங்கப்பட்டும், தப்பிக்க முயன்றபோது மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டும் சித்ரவதைக்கு உள்ளாகியுள்ளார்.
தன் மகனை மீட்க 13 ஆண்டுகளாகப் போராடிய தாய் ஜரினா, ஊர் விலக்கம் மற்றும் மிரட்டல்களையும் பொருட்படுத்தாமல் சட்டப் போராட்டம் நடத்தினார். இறுதியில் நீதிமன்ற உத்தரவின் பேரில், கடத்தல்காரர்கள் பயந்துபோய் முன்னாவை அராரியா ரயில் நிலையத்தில் விட்டுச் சென்றனர்.
12 வயதில் பிரிந்த சிறுவன், இன்று 25 வயது இளைஞனாகத் தன் தாயைக் கட்டிப்பிடித்து அழுத காட்சி கல்நெஞ்சையும் கரைய வைத்தது. மனித கடத்தல் கும்பலின் பிடியில் சிக்கி மீண்டு வந்த முன்னாவின் வாக்குமூலத்தை வைத்து, போலீசார் அந்தப் பெரிய நெட்வொர்க்கை வேட்டையாடத் தொடங்கியுள்ளனர்.
