கேரள மாநில அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் (KSRTC) புதிய விளம்பரத் தூதுவராக முன்னணி நடிகர் மோகன்லால் அதிரடியாக நியமிக்கப்பட்டுள்ளார். இது போக்குவரத்துத் துறைக்கு புத்துயிர் அளிக்கும் வகையில், எவ்வித ஊதியமும் பெறாமல் முற்றிலும் இலவசமாகவே இந்தச் சேவையைச் செய்ய மோகன்லால் முன்வந்துள்ளதாக அம்மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.பி. கணேஷ்குமார் தெரிவித்துள்ளார். கே.எஸ்.ஆர்.டி.சி-யின் பெருமையை விளக்கும் வகையிலான புதிய விளம்பரப் படங்களில் நடிக்கவும் அவர் சம்மதம் தெரிவித்துள்ளதை அடுத்து, பிரபல இயக்குநர்களைக் கொண்டு இதற்கான பணிகளைத் தொடங்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
கேரளாவில் சுமார் 4,952 பேருந்துகளை இயக்கி வரும் இக்கழகம், அண்டை மாநிலங்களான தமிழகம் மற்றும் கர்நாடகாவிற்கும் சேவைகளை வழங்கி வருகிறது. தற்போது டிக்கெட் வருவாய் மட்டுமின்றி, பேருந்து நிலையங்களில் உள்ள கடைகளின் வாடகை மற்றும் பெட்ரோல் பங்குகள் மூலம் வருவாயை ஈட்டி வரும் நிலையில், மோகன்லால் போன்ற ஒரு மக்கள் நாயகனின் வருகை பொதுமக்களிடையே பேருந்து பயணத்தை மேலும் பிரபலப்படுத்தும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
