உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள பிரபல கல்யாண் ஜூவல்லர்ஸ் ஷோரூமில், வாடிக்கையாளர்கள் போல வேடமிட்டு வந்த மூன்று பெண்கள், கண்ணிமைக்கும் நேரத்தில் 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை திருடிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள இந்த கடைக்கு வந்த மர்மப் பெண்கள், ஊழியரிடம் நகைகளை காண்பிக்குமாறு கேட்டு திசைதிருப்பியுள்ளனர். அந்த சமயம் பார்த்து, விற்பனையாளரின் கவனக்குறைவை சாதகமாக்கிக் கொண்ட ஒரு பெண், கண்ணாடி அலமாரிக்குள் இருந்த தங்கத் தோடுகள் அடங்கிய பெட்டியை நைசாக எடுத்து பக்கத்தில் இருந்த பெண்ணின் சால்வைக்குள் மறைத்துள்ளார்.

சுமார் 14 நிமிடங்கள் கடையிலேயே முகாமிட்டு நேர்த்தியாக அரங்கேற்றப்பட்ட இந்த ‘நாகரீக’ திருட்டுச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் துல்லியமாகப் பதிவாகியுள்ளது. கடை மேலாளர் அளித்த புகாரின் பேரில் சிவில் லைன்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வைரலாகி வரும் வீடியோ காட்சிகளைக் கொண்டு தலைமறைவான அந்த மர்மப் பெண்களை வலைவீசித் தேடி வருகின்றனர்.