தமிழகத்தில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான பிரவீன் சக்கரவர்த்தி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யைச் சந்தித்ததை உறுதிப்படுத்தியுள்ளார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில், குறிப்பாக திமுக – காங்கிரஸ் கூட்டணிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரவீன் சக்கரவர்த்தி, தமிழக அரசியல் சூழல் மற்றும் விஜய் குறித்த தனது நிலைப்பாட்டை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது: “மக்கள் இப்போது விஜய்யை வெறும் நடிகராகப் பார்க்கவில்லை; அவர் ஒரு மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவெடுத்துவிட்டார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அவரை மக்கள் பார்க்க வரும் ஆர்வம், அவர் ஒரு அரசியல்வாதியாக அங்கீகரிக்கப்பட்டதைக் காட்டுகிறது. அவரை நான் சந்தித்தது உண்மைதான். ஒருவரைத் தனிப்பட்ட முறையில் சந்திப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? தமிழ்நாட்டில் மட்டும்தான் இத்தகைய சந்திப்புகள் இவ்வளவு பெரிய விவாதமாக மாற்றப்படுகின்றன.”
கட்சியின் பலவீனம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து அவர் பேசுகையில், “காங்கிரஸ் கட்சி தற்போது பலவீனமடைந்து வருகிறது. கட்சியை மீண்டும் வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். அதற்குத் தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிடுவதும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறுவதும் அவசியம். அதற்காகவே நாங்கள் கூடுதல் இடங்களையும், ஆட்சியில் பங்கையும் கேட்கிறோம். இது ஒரு ஜனநாயகக் கட்சி என்பதால் தொண்டர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைப்பதில் தவறில்லை,” என்றார்.
விஜய்யுடனான சந்திப்பு ஒரு புதிய கூட்டணிக்கான தொடக்கமா என்ற கேள்விக்கு, “கூட்டணி குறித்து கட்சியின் மேலிடம் தான் இறுதி முடிவெடுக்கும். தொண்டர்கள் தங்கள் விருப்பங்களைக் கூறலாம். விஜய் மீதான மக்களின் ஈர்ப்பு வாக்குகளாக மாறுமா என்பது போகப்போகத்தான் தெரியும்,” என்று பதிலளித்தார்.
தமிழகத்தின் நிதிநிலை குறித்து உத்தரப் பிரதேசத்துடன் ஒப்பிட்டுப் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “நான் எதனுடனும் ஒப்பிடவில்லை. தமிழகத்தின் கடன் சுமை குறித்து ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்ட தரவுகளைத் தான் சுட்டிக்காட்டினேன். அது ஒரு புள்ளிவிவரக் கருத்துக்கணிப்பு மட்டுமே; இதில் சர்ச்சை ஏதுமில்லை,” என விளக்கமளித்தார்.
திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகப் பேச்சுகள் எழுந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவரே விஜய்யைச் சந்தித்துப் பேசியிருப்பதுடன், அவரைப் பாராட்டிப் பேசியிருப்பது வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
