உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில், 10 வயது சிறுவன் ஒருவன் செல்போனில் ‘ரீல்ஸ்’ (Reels) பார்த்துக்கொண்டிருந்த போதே திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தச் சிறுவன் வழக்கம்போல ஆரோக்கியமாகவே இருந்ததாகவும், மொபைல் பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென பின்னோக்கி விழுந்து மயக்கமடைந்ததாகவும் அவனது பெற்றோர் தெரிவித்துள்ளனர். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டும், வழியிலேயே சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
இந்தச் சிறு வயது மரணம் குறித்து மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இருப்பினும், வெறும் ரீல்ஸ் பார்ப்பது மட்டுமே ஒருவரின் மரணத்திற்கு நேரடி காரணமாக இருக்க முடியாது என்று மருத்துவ நிபுணர்கள் விளக்குகின்றனர்.
மொபைல் திரையைப் பார்ப்பதால் திடீரென உயிர் பிரியும் என்பதற்கு மருத்துவ ரீதியாக எந்த ஆதாரமும் இல்லை என்றும், மறைந்திருக்கும் இதயக் கோளாறுகள் அல்லது மூளை தொடர்பான பாதிப்புகளே இதுபோன்ற திடீர் மரணங்களுக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
சிறுவன் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்தது ஒரு தற்செயலான நிகழ்வாக இருக்கலாம் என்றும், பிரேதப் பரிசோதனைக்குப் பிறகே உண்மையான காரணம் தெரியவரும் என்றும் மருத்துவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
