புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்றாலே கேக் வெட்டுவது அல்லது புத்தாடை அணிவது போன்ற வழக்கமான முறைகளைத் தாண்டி, துபாயைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் தனது மனைவிக்கு அளித்த பிரம்மாண்டப் பரிசு உலகையே வியக்க வைத்துள்ளது. புத்தாண்டை முன்னிட்டுத் தனது அன்புக்குரிய மனைவிக்கு ஒன்றல்ல இரண்டல்ல, நான்கு விலை உயர்ந்த அதிநவீன சொகுசு கார்களை அவர் ஒரே நேரத்தில் பரிசாக வழங்கியுள்ளார்.

கார் பிரியர்களின் கனவு வாகனங்களாகக் கருதப்படும் ரோல்ஸ் ராய்ஸ், லம்போர்கினி, மெர்சிடிஸ் ஜி-வேகன் மற்றும் போர்ஷே ஆகிய நான்கு கார்களும் கருப்பு மற்றும் தங்க நிற பலூன்களால் அலங்கரிக்கப்பட்டு அணிவகுப்பாக நிறுத்தப்பட்டிருந்த விதம் பார்ப்பவர்களைத் தலைசுற்ற வைத்துள்ளது.

துபாயின் ஆடம்பர வாழ்க்கை முறைக்குச் சான்றாக அமைந்துள்ள இந்த நிகழ்வு குறித்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணையதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன. ஹாலிவுட் படக் காட்சிகளை விஞ்சும் வகையில், அந்தத் தம்பதியினர் சொகுசு கார்களின் வரிசைக்கு முன்னால் நடந்து வரும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பலவிதமான விவாதங்களை எழுப்பியுள்ளன.

ஒரு கார் வாங்குவதற்கே பல ஆண்டுகள் உழைக்க வேண்டிய சூழலில், ஒரே நாளில் நான்கு சொகுசு கார்களைப் பரிசாக வழங்கியது பெரும் செல்வந்தர்களின் வாழ்க்கை முறையைப் பிரதிபலிப்பதாக இணையவாசிகள் ஆச்சரியத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.