2020-ம் ஆண்டு டெல்லி கலவரம் தொடர்பாக தொடரப்பட்ட சதி வழக்கில், ஜே.என்.யு முன்னாள் மாணவர் உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோரின் ஜாமீன் மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று அதிரடியாக தள்ளுபடி செய்தது. கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள இவர்களுக்கு ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதிகள், மற்ற 5 பேருக்கு மட்டும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். ஜாமீன் மறுக்கப்பட்டதை அடுத்து, தனது தோழி பானோஜ்யோத்ஸ்னாவிடம் தொலைபேசியில் பேசிய உமர் காலித், “எனக்கு ஜாமீன் கிடைக்கவில்லை என்றாலும் மற்றவர்கள் விடுதலையாவது மகிழ்ச்சி அளிக்கிறது; இப்போது சிறையே எனது வாழ்க்கையாகிவிட்டது” என்று உருக்கமாகப் பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முன்னதாக, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது நிகழ்ந்த வன்முறை தொடர்பாக இவர்கள் மீது உபா (UAPA) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நேற்றைய விசாரணையின்போது, விசாரணைக் கைதியாக சிறையில் இருக்கும் காலத்தைத் தண்டனையாகக் கருத முடியாது என்று குறிப்பிட்ட நீதிமன்றம், உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோர் இந்தச் சதியில் முக்கியப் பங்காற்றியதாகக் கூறி நிவாரணம் வழங்க மறுத்தது. எனினும், குல்பிஷா ஃபாத்திமா உள்ளிட்ட மற்ற 5 பேருக்கு ஜாமீன் வழங்கிய நிலையில், உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோர் ஓராண்டுக்குப் பிறகு அல்லது முக்கிய சாட்சிகள் விசாரணை முடிந்த பின் மீண்டும் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.