இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் சமீபகாலமாக ரன்கள் குவிக்க முடியாமல் திணறி வருவது இந்திய ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. 2025-ஆம் ஆண்டில் அவர் விளையாடிய 21 போட்டிகளில் வெறும் 218 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார், இதில் அவரது பேட்டிங் சராசரி 13.62 என்ற அளவில் மிகவும் குறைவாக உள்ளது.
விரைவில் டி20 உலகக்கோப்பை தொடங்க உள்ள நிலையில், உலகின் முதல் நிலை வீரராகக் கருதப்படும் அவரது இந்த மோசமான ஃபார்ம் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
சூர்யகுமாரின் இந்தச் சரிவு குறித்துப் பேசியுள்ள முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங், அவர் ஆட்டமிழப்பதைப் பற்றி பயப்படாமல் பழையபடி அதிரடியாக விளையாட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
“சூர்யகுமார் ரன் எடுப்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும், அவுட்டாவதைப் பற்றி யோசிக்கக் கூடாது; டிராவிஸ் ஹெட்டைப் போலத் துணிச்சலாகத் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மீண்டும் ஃபார்முக்கு வர முடியும்” என்று பாண்டிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தன்னம்பிக்கையுடன் விளையாடி தான் யார் என்பதை அவர் மீண்டும் உலகிற்கு நிரூபிக்க வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.
