உத்தரபிரதேச மாநிலத்தில் தெருநாய் ஒன்றிற்கு வலுக்கட்டாயமாக மதுபானம் கொடுத்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த மனிதாபிமானமற்ற செயல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கண்டனங்களைப் பெற்று வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜிதேந்திரா. இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அப்பகுதியில் சுற்றித் திரிந்த ஒரு தெருநாயைப் பிடித்துள்ளார். பின்னர், அந்த வாயில்லா ஜீவனுக்கு வலுக்கட்டாயமாக மதுபானத்தை வாயில் ஊற்றினார்.
ஜிதேந்திரா நாய்க்கு மது கொடுப்பதைக் கண்டு தடுக்காமல், அவரது நண்பர்கள் அதனைத் தங்களது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோவை வேடிக்கைக்காகச் சமூக வலைதளங்களில் அவர்கள் பதிவிட, அது காட்டுத்தீயாகப் பரவியது. விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் இந்த வீடியோவைக் கண்டு ஆத்திரமடைந்து, சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறையினருக்குப் புகார்களை அனுப்பினர்.
A man in Uttar Pradesh’s Baghpat has been arrested for forcing liquor on helpless stray dog pic.twitter.com/NcgvReN5ZM
— The Bharat Post (@TheBharatPost_) January 5, 2026
இந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் பாக்பத் மாவட்ட காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் வீடியோவில் இருந்த நபர் ஜிதேந்திரா என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, விலங்கு வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், இன்று ஜிதேந்திராவைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். “விலங்குகளைத் துன்புறுத்துவது தண்டனைக்குரிய குற்றம்; இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனப் போலீசார் எச்சரித்துள்ளனர்.
