சென்னையில் பள்ளி மாணவியை வலுக்கட்டாயமாக வீட்டுக்குள் இழுத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

சென்னை தி.நகர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் நேற்று முன்தினம் நந்தனம் பகுதியில் உள்ள தனது சித்தப்பா வீட்டுக்குச் சென்றுவிட்டு, விளையாடி முடித்துவிட்டு மீண்டும் தனது வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது, நந்தனம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் நீலகண்டன் (25) என்பவர், சிறுமியின் கையைப் பிடித்து வலுக்கட்டாயமாக தனது வீட்டுக்குள் இழுத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமியிடம் தான் காதலிப்பதாகக் கூறிய நீலகண்டன், “நீ 12-ம் வகுப்பு முடித்தவுடன் உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன்” எனக் கூறி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி சத்தமிட்டு அழுதுள்ளார். உடனே நீலகண்டன், “நடந்ததை வெளியே சொன்னால் உனக்குத்தான் அவமானம். மீறிச் சொன்னால் உன்னைக் கொலை செய்துவிடுவேன்” என மிரட்டி சிறுமியை வெளியே அனுப்பியுள்ளார்.

வீடு திரும்பிய சிறுமி, நடந்த சம்பவத்தைத் தனது தாயாரிடம் கூறி அழுதுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், தேனாம்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், ஆட்டோ ஓட்டுநர் நீலகண்டன் மீது போக்சோ (POCSO) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தற்போது தலைமறைவாக உள்ள நீலகண்டனைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.