கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மலம்புழா பகுதியில் பள்ளி மாணவனுக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலம்புழாவில் உள்ள உதவி பெறும் பள்ளி ஒன்றில் சமஸ்கிருத ஆசிரியராகப் பணியாற்றி வரும் அனில் என்பவர், கடந்த நவம்பர் 29-ஆம் தேதி தனது வீட்டிற்கு 12 வயது மாணவனை அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு மாணவனை வலுக்கட்டாயமாக மது அருந்தச் செய்த ஆசிரியர், பின்னர் அவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்று மாணவனை மிரட்டியுள்ளார். ஆனால், பாதிக்கப்பட்ட மாணவன் தனது நண்பனிடம் நடந்ததைக் கூற, அந்த நண்பன் தனது தாயிடம் தகவலைத் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மாணவனின் உறவினர்கள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். பள்ளி நிர்வாகம் இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கத் தாமதம் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், காவல்துறையின் உளவுப்பிரிவுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் விசாரணை முடுக்கிவிடப்பட்டது. மலம்புழா போலீசார் மாணவனிடம் வாக்குமூலம் பெற்று, ஆசிரியர் அனில் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை அதிரடியாகக் கைது செய்தனர்.
இதனிடையே, பள்ளி நிர்வாகம் இச்சம்பவத்தை மறைக்க முயலவில்லை என்றும், உறவினர்கள் புகார் அளித்த உடனே ஆசிரியரைப் பணிநீக்கம் செய்துவிட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் விளக்கம் அளித்துள்ளது. பள்ளியில் அரங்கேறிய இந்த அநாகரிகச் சம்பவம் மாணவர்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை அப்பகுதி மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
