சமூக வலைதளங்களில் ஆன்மிகச் சிறுவன் என்று அறியப்படும் அபினவ் அரோராவைச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பள்ளிக்கு அனுப்புவது போன்ற புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
கிருஷ்ண பக்தராகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் 11 வயது அபினவ் அரோரா, அண்மையில் ஆன்மிக நேர்காணல் ஒன்றில் கேட்கப்பட்ட எளிய கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தெரியாமல் திணறியதும், ஜகத்குரு ராம்பத்ராச்சாரியாரால் மேடையிலிருந்து இறக்கிவிடப்பட்டதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து அவரைப் பலரும் கேலி செய்து வரும் நிலையில், எக்ஸ் தளத்தில் உள்ள கிரோக் எனும் செயற்கை நுண்ணறிவு மென்பொருளிடம் பயனர் ஒருவர் அபினவ் அரோராவின் புகைப்படத்தைக் கொடுத்து, அவருக்குப் பள்ளிச் சீருடை மற்றும் புத்தகப் பையை அணிவித்து பள்ளிக்கு அனுப்பி வைக்குமாறு கட்டளையிட்டார். அந்த மென்பொருளும் உடனடியாக அபினவ் அரோராவைப் பள்ளி மாணவனைப் போல மாற்றிக் காட்டியது.
भाई @grok इसको स्कूल यूनिफार्म पहनाओं और बैग लेकर स्कूल पहुंचाओ.. pic.twitter.com/WamnRb3uo3
— Deepak Singh (@DEEPAKdasak21) January 2, 2026
இந்தச் செயல் ஒருபுறம் வேடிக்கையாகப் பார்க்கப்பட்டாலும், அனுமதி இன்றி ஒருவரின் புகைப்படத்தைச் செயற்கை நுண்ணறிவு மூலம் மாற்றியமைப்பது மற்றும் இதனைத் தவறான நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவது சமூக வலைதளங்களில் புதிய விவாதத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
