அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் திருடிய பொருளைத் திருடனே மீண்டும் ஒப்படைத்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. மியூசிக் என்ற இசைக்கருவிகள் விற்பனை செய்யும் கடையில் இருந்து, சுமார் 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான இரண்டு ‘மேண்டலின்’ கருவிகளை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றார்.

மேலும் திருட்டுச் சம்பவம் தொடர்பாகக் கடை உரிமையாளர் பஜி லெவின் சிசிடிவி காட்சிகளைப் பகிர்ந்து புகார் அளித்திருந்தார். ஆனால், சில நாட்களிலேயே அந்தத் திருடன் மனம் மாறி, திருடப்பட்ட கருவிகளை இரண்டு பைகளில் வைத்துக் கடையின் வாசலில் ரகசியமாக ஒப்படைத்துவிட்டுச் சென்றுள்ளார்.

அவ்வாறு கருவிகளைத் திருப்பிக் கொடுத்ததுடன், அத்துடன் ஒரு மன்னிப்புக் கடிதத்தையும் அந்த நபர் விட்டுச் சென்றுள்ளார். அதில், “என்னை மன்னித்து விடுங்கள், நான் மது போதையில் இருந்ததால் தெரியாமல் இந்தத் தவறை செய்துவிட்டேன். நீங்கள் ஒரு நல்ல மனிதர், இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்” என்று உருக்கமாகக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் அந்த நபர் ஓடுவதைக் கண்ட கடை உரிமையாளர் அவரைப் பிடிக்க முயன்றும் அவர் தப்பிவிட்டார். திருடப்பட்ட விலையுயர்ந்த இசைக்கருவிகள் எவ்வித சேதமும் இன்றித் திரும்பக் கிடைத்ததைக் கண்டு கடை உரிமையாளர் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளார். இந்தச் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.