சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியம் செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர் அறையில் மது பாட்டில்கள் மற்றும் நொறுக்குத் தீனிகள் இருந்ததாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பான காட்சிகளைத் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள அவர், அந்த நேரத்தில் மருத்துவமனையில் இரவு நேரப் பணியாளர்கள் ஒருவர்கூட இல்லை என்ற திடுக்கிடும் தகவலையும் தெரிவித்துள்ளார்.

​திமுக ஆட்சியில் தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் முதல் அரசு மருத்துவமனைகள் வரை போதைப் பொருட்கள் பரவி வருவதாகச் சாடியுள்ள எச்.ராஜா, இந்த அவல நிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியனும் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்தப் பதிவு தற்போது அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.