உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் இருந்து மீரட் நோக்கிச் செல்லும் நமோ பாரத் அதிவேக ரயிலில் கடந்த நவம்பர் மாதம் காதல் ஜோடி ஒன்று அநாகரீகமாக நடந்துகொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முராத் நகர் மற்றும் மீரட் தெற்கு ரயில் நிலையங்களுக்கு இடையே நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடர்பாக ரயில்வே நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாணவ, மாணவியர் கல்லூரிக்குச் செல்வதைத் தவிர்த்து வந்த நிலையில், அந்த மாணவி தற்கொலை செய்துகொண்டதாகத் தவறான தகவல்கள் பரவின. இந்தச் சூழலில், அந்த ஜோடியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இருவீட்டுப் பெற்றோர்களும் பேசி ஒரு சுமுக முடிவுக்கு வந்துள்ளனர்.
அதன்படி, பிசிஏ பயிலும் அந்த மாணவிக்கும், பிடெக் பயிலும் அந்த மாணவருக்கும் சமூக சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் செய்து வைக்கப்பட்டுள்ளது. ஒரே சமூகத்தைச் சேர்ந்த இவர்களுக்கு அடுத்த ஒரு வாரத்திற்குள் திருமணம் செய்து வைக்க இரு குடும்பத்தினரும் முடிவு செய்துள்ளனர். தங்களின் பிள்ளைகள் புதிய வாழ்க்கையைத் தொடங்க உள்ளதால், பழைய வீடியோக்களைப் பகிர்ந்து அவர்களை மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக்க வேண்டாம் என்று அவர்களது பெற்றோர்கள் பொதுமக்களுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
