ஹரியானா மாநிலம் கைத்தல் மாவட்டத்தில் கால்வாய் அருகே நாய்கள் இழுத்துச் சென்ற சூட்கேஸில் இளம்பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைத்தல் மாவட்டம் ஷீலா கேரா கிராமத்தில் நேற்று முன்தினம் மதியம் விவசாயிகள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, நாய்கள் ஏதோ ஒரு மர்மமான நீல நிற சூட்கேஸை கால்வாயிலிருந்து வெளியே இழுத்துச் செல்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக மகளிர் காவல் நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சூட்கேஸைக் கைப்பற்றி சோதனையிட்டனர். அதில் சுமார் 28 முதல் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரின் உடல் சிதைந்த நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பெண்ணின் கழுத்தில் கயிறு இறுக்கப்பட்ட தழும்புகள் இருப்பதால், அவர் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல் நீண்ட நாட்கள் தண்ணீரில் ஊறியிருந்ததால் அடையாளம் காண முடியாத அளவிற்கு உப்பிக் காணப்படுகிறது. எனினும், அந்தப் பெண்ணின் கையில் ஒரு டாட்டூ (பச்சை குத்தப்பட்ட அடையாளம்) இருப்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.

இந்த டாட்டூவே தற்போது குற்றவாளியைக் கண்டறியவும், பெண்ணின் அடையாளத்தை உறுதிப்படுத்தவும் போலீசாருக்குக் கிடைத்துள்ள முக்கியத் தடயமாக உள்ளது. கடந்த மார்ச் மாதம் ரோஹ்தக் பகுதியில் காங்கிரஸ் நிர்வாகி ஹிமானி நர்வால் இதே போன்று சூட்கேஸில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தின் சுவடு மறைவதற்குள், மீண்டும் ஒரு பெண்ணின் உடல் சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்டது ஹரியானாவில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. தற்போது சடலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், தடயவியல் நிபுணர்கள் தீவிர ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.